Monday, May 3, 2010

கேள்வி - பதில் -3

3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே!

சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.

இது புரிய வேண்டும் என்றால்
மார்க்கங்கள் நான்கும் புரிய வேண்டும்.
நான்கு மார்க்கங்கள் ஆவன
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம்
ஆக நான்கு உள்ளன.

சற்புத்திர மார்க்கம் என்றால் இறைவனை தந்தையாகவும்
நம்மை அவரது பிள்ளையாகவும் பாவித்து இறைவனை தொழுவது.
இது ஒரு விதத்தில் ஏசு பெருமான் திரு ஞான சம்பந்தர், அப்பர் போன்றவர்கள்
தொழுத முறை.

தாச மார்க்கம் என்பது இறைவனை ஆசிரியராகவும் நம்மை
அவரது சீடனாகவும் பாவித்து இறைவனிடம் கேள்வி கேட்டு பதிலை பெருகின்றதும் அதன் மூலம் ஞானத்தை அடைய முயற்சிப்பதும் ஆகும்.
மாணிக்க வாசக பெருமான் இந்த முறையிலேயே இறைவனை கண்டார்.

சக மார்க்கம் என்பது இறைவனை நமது தோழனாக காண்பது.
இறைவனிடம் அதிக உரிமை எடுத்துகொண்டு இறை அறிவை பெறுவது.
இதை ஓரளவு மகா பாரதத்தில் அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட நட்பை போல என்று சொல்லலாம்.

அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.

சன்மார்க்கம் தவிர்த்த மூன்றும் இறைவனை வேறாக காண்பதனால் இதை துவைதம் என்று அழைக்கலாம்.
சன்மார்க்கம் ஒன்றில் மட்டுமே இறைவனும் தானும் ஒன்றாகும் தன்மை ஏற்படுவதனால் இதை அத்வைதம் என்று அழைக்கலாம்.

அடுத்து வள்ளல் பெருமானார் அனைத்து உயிர்களையும் தானாக காணும் பக்குவம் பெற்ற காரணத்தால் இந்த அருட்பா, மருட்பா விவகாரத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் ஒருமை பெற்ற ஒருவருக்கு
எதிர்ப்பவரும், எதிர்க்கப் பட்ட நபரும் ஒன்றாகவே தெரியும்.
இங்கே எதிர்ப்பவர் யார் ? எதிர்க்கப் படும் நபர் யார் ?
அனைத்தும் ஒன்று தானே ?

இங்கே அருட்பா, மருத்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் அது மிக பெரிய கட்டுரையாக மாறி விடும். ஆகவே சுருக்கமாக கூறுகிறேன்.
சைவ சமயத்தின் மீதும் சைவ சித்தாந்தங்களின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இலங்கையை சேர்ந்த கொழும்பு ஆறுமுக நாவலர்.
இவர் மிகுந்த சைவ மத பற்றாளர். ( இவர்தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார்). இவர் சைவ சமத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தில் தங்கி பல நூல்களை எழுதி வந்தார்.
இந்த கால கட்டத்தில் வள்ளலார் எழுதிய திரு அருட்பா பாடல்கள் சைவ சமயம் சார்ந்தவர்களால் ஏற்றுகொள்ளபட்டு பாடல்களாக பாடப்பட்டு வந்தன.
சைவ திரு முறைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆறுமுக நாவலரிடம்
வள்ளலாரை பற்றி தவறான கருத்துக்களை கூறி அவரை வள்ளலாருக்கு எதிராக ஒரு சிலர் தூண்டி விட்டனர். உண்மையை உணராத ஆறுமுக நாவலர் ஒரு சிலரின் தூண்டுதலால் வழக்காடு மன்றம் வரை சென்று பின்னர் தோற்று
அவரின் புகழை இழந்தார்.

ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை வைத்திருந்தார்.

அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று அனைவருக்கும் எடுத்து கூறினார்.
இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)

அவர் உயர்ந்த அருளாளர் என்பதனால் அவரது கருத்துக்கள் என்ன என்பது அவர் கைப்பட எழுதிய பாடல்களில் உள்ளதனால் வேறு யாரும் அவர் கருத்தினை மாற்ற முடியாது. அவரது கைப்படவே வாழ்வியல் முதல் ஞான நிலை வரை அனைத்து நிலைகளையும் எழுதி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment