மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?
நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது.
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.
உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.
ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம் சுத்த மாயை கொண்ட ஆன்மா
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.
அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து விடும்.
ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.
அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால்
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று
அவருக்கு தெரிந்து விட்டது என்றால்
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து
அறிவின் வழி நடக்க தொடங்கும்.
அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால்
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும்
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது
நாம் மாயையின் வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை
அறிவு நமக்கு அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.
அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம்
தவறான செயல்களை செய்வதிலிருந்து
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.
அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள்
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.
இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment