பூனை கட்டி ஆசிரமம்
நமது வள்ளல் பெருமான் சாதி சமயங்களில் நிறைந்து கிடக்கும் சடங்குகளை ஒழித்து அனைவரும் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டும்
என்ற இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற நமக்கு பாதை வகுத்து கொடுத்துள்ளார்கள்.
ஆனால் ஒரு சிலர் புதியதாக சன்மார்க்கத்திற்கு சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள். இது சன்மார்க்கத்திற்கு எதிரானது.
நமது பெருமானார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்று சடங்குகளை ஒழிக்க வேண்டும்
என்று கூறி உள்ளார்கள். அப்படிப்பட்ட நமது பெருமானாரின் பாதையான சுத்த சன்மார்க்கத்தில் சடங்குகள் தேவையா ?
ஒரு ஞானியின் மடத்தில் தினமும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.அந்த மடத்தில் ஒரு பூனை இருந்தது.
அந்த பூனை கூட்டு பிரார்த்தனையின் போது ஒவ்வொரு நாளும் சத்தம் எழுப்பி கொண்டு இருந்தது.ஒரு நாள் அந்த ஞானி இனி மேல் கூட்டு பிராத்தனை நடைபெறுவதற்கு முன்னர் அந்த பூனையை அந்த தூணில் கட்டி விடுங்கள் என்று கூறினார். அன்று முதல் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவதற்கு முன்னர் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.சில நாள் சென்ற பின்னர் அந்த ஞானி இறை நிலையினை அடைந்தார்.அன்றே அந்த பூனையும் செத்து விட்டது.புதிய குருவாக தலைமை சீடர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அடுத்த நாள் கூட்டு பிரார்த்தனை புதிய குருவின் தலைமையில் நடைபெற இருந்தது. புதிய குரு சீடர்களிடம் உடனே போய் ஒரு பூனையை பிடித்து வாருங்கள்.நமது குரு பூனையை தூணில் கட்டிய பிறகுதான் கூட்டு பிரார்த்தனையை ஆரம்பிப்பது வழக்கம்.ஆகவே ஒரு பூனையை பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து பின்னர் கூட்டு பிராத்தனை ஆரம்பிக்கப்பட்டது.அதுவே வழக்கமாகவே அந்த ஆசிரமத்திற்கு பூனை கட்டி ஆசிரமம் என்று பெயர் ஏற்பட்டது.
அது போல் தான் நமது சடங்குகள் எல்லாம் முற்காலத்தில் உள் தத்துவங்களை வெளியாக காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டன. அந்த சடங்குகள் அனைவரும் ஞான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தப் பட்டன.ஆனால் பூனையை கட்டிய கதையாக முடிந்தது.
அதுபோல்தான் நாம் புதிய சடங்குகளை சன்மார்க்கத்திற்கு என ஏற்படுத்துவதும் ஆகி விடும். இதை நமது வள்ளல் பெருமான் உணர்ந்து தான் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்கும் தேவை இல்லை கொல்லா விரதம் தவிர வேறு எந்த விரதமும் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.
ஆகவே நமது சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்குகளும் தேவை இல்லை என்பதை உணர வேண்டும்.
No comments:
Post a Comment