Sunday, April 11, 2010

சகஜ பழக்கம் - சமாதி பழக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான்
சகஜ பழக்கமே சிறந்தது - சமாதி பழக்கம் கூடாது
என்று கூறி இருக்கிறார்கள்.

சகஜ பழக்கம் என்றால் என்ன ?

சகஜம் என்றால் எப்போதும் இயல்பாக இருப்பது என்று பொருள் படும்.
நமது மனம் மற்றும் உணர்வை எப்போதும்
புருவ மத்தியத்தில் வைத்திருப்பதன் மூலம்
ஆன்மா விழிப்புணர்வு அடைந்து
எப்போதும் ஆன்மா அறிவுடன் இருப்பதன் மூலம்
நாம் உலகியலில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும்
இறை உணர்வுடன் இருப்போம். ஆன்மா அறிவு செயல்படும்போது
நமது மனம் அதன் செயலை ஆன்மா அறிவின் துணையின்றி செய்யாது.
இது ஒரு வகையில் நாம் எப்போதும் இறை உணர்விலேயே
இருப்பதற்கான சுலபமான வழி.

மேலும் நான் என்கின்ற உணர்வும் மிக எளிதாக நம்மை விட்டு நீங்கும்.
மனம் கட்டுப்படுத்தபடுவதனால்
மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை
நம்மை விட்டு விலகுவதற்கு முற்படும்.
இதன் மூலம் அடுத்த நிலையான முக்தி நிலைக்கு
நாம் சீக்கிரமே தயார் ஆகி விடுவோம்.
சிவத்தின் உண்மை தன்மையை
தற்போதம் அற்று ஆன்மா அனுபவம் பெறும்.

சமாதி பழக்கம் என்றால் என்ன ?

பொதுவாக உலகியலில் சமாதி என்றால்
மனிதர்கள் செத்த பிறகு அவர்களை புதை குழியில்
வைத்து மண்ணை மூடி அடையாளமாக மண்ணாலோ
சுண்ணாம்பு அல்லது சிமென்ட் மூலம் ஒருமேடை அமைப்பார்கள்.
அதைதான் சமாதி என்று அழைத்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்களை
சமாதி வைக்கும் பழக்கம் நமது தமிழகத்தில் நெடுங் காலமாக
இருந்து வருகிறது. காரணம் சைவ சமயத்தில் மட்டுமே
முக்தி நிலை வரை சொல்லப் பட்டுள்ளது.
மற்ற சமயங்களில் பக்தி நிலை வரை மட்டுமே உள்ளது.

சைவ சமயத்தில் ஏன் இறந்தவரை எரிக்காமல் புதைத்தார்கள் என்றால்
உண்மையில் இறந்தவர்க்கும் முக்தி அடைந்தவர்க்கும் அந்த கால
பாமர மக்களால் வித்தியாசம் காண முடியாமல்
எரித்து விட்டார்கள் என்றால் அந்த ஆன்மா மீண்டும் உடல் எடுப்பதற்காக
பிறக்க வேண்டும்.. மேலும் எரித்தவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும்.
ஆக சமாதி நிலை என்பது ஆன்மா சிவத்தோடு கலந்து
அதிலேயே லயித்து இருப்பதற்கு தான் சமாதி நிலை என்று பெயர்.
மேலும் ஆன்மா சிவ கலப்பாய் இருந்து உலகியலுக்கு மீண்டு திரும்பாத நிலை
ஏற்பட்டால் உலகிலுள்ள மனிதர்கள் அவர் இறந்து விட்டார் என்று
நினைத்து விடுவார்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமான்
சாலை சம்பந்தம் உடையவர்களை சமாதி செய்யுங்கள்
அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று கூறினார்.

உலகியலில் உள்ளவர்களுக்கு சகஜ பழக்கமே சுலபமானது.
துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே சமாதி பழக்கம் நல்லது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு.

1 comment:

  1. http://www.vallalarspace.com/VallalarVarugai/Articles/2178

    ReplyDelete