Tuesday, February 8, 2011

அதிசயம் - காணும் காட்சி



அன்பு சகோதரர்களே,

என்னுடைய மகன் அரவிந்தன் (ஏழாம் வகுப்பு படிக்கின்றான்)
கணிப்பொறியில் வரைந்த ஓவியம்
இதில் ஒரு அதிசயம் உள்ளது.


இந்த ஓவியத்தில் உள்ள Arvindh என்ற எழுத்துக்களை

ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் உற்று பார்க்கவும்

பின்னர் உங்கள் கண்களை சுவரின் வெற்று பகுதியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ (பெரியது)

உற்று நோக்கவும் உங்களுக்கு ஒரு அதிசயம் தென்படும்.

அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்



ஓவியம் வரைந்தவர் - அரவிந்தன்

Thursday, January 20, 2011

தருமச்சாலை - ஞானசபை விளக்கம்

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

நமது வள்ளல் பெருமான் முதலில் தருமச்சாலையையும்,
அடுத்து ஞான சபையையும் ஏற்படுத்தினார்கள்.

இது அக அனுபவத்தை புறத்தில் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தருமச்சாலை எதற்காக கட்டப்பட்டது என்றால்
சீவகாருண்யத்திற்காக கட்டப்பட்டது.
சரி
சீவகாருண்யம் எதற்காக நாம் கடைபிடிக்க வேண்டும் ?
நாம் அனைவரும்
அதாவது மனிதர்கள் முதல் புழு புச்சிகள் வரை உள்ள சீவர்கள்
அனைவரும் ஒன்றான பரம்பொருளில் இருந்து வந்தவர்கள்.
ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள்.
ஒரு சகோதரன் பசியுடன் இருக்கும்போது
மற்றொரு சகோதரன் உணவருந்துவது தகுமா ?
ஆகவே பசித்தவர்களுக்கு உணவளிப்பது என்பது
நமக்கு நாமே உணவு அளித்துக்கொள்வதே ஆகும்.
அதுவே ஒருமை நிலைக்கு நம்மை மேலெடுத்துச் செல்லும்.

அதாவது தற்போதம் எனும் நான் எனும் உணர்வு கடந்தால்
தருமச்சாலை எனும் சீவகாருண்ய மயமாவோம்.
இது உள் அனுபவத்தில் விளங்கும்.

அடுத்து
ஞான சபையில் உள்ள சிற்சபை, பொற்சபை என்பது
இரண்டு கண்களையும் வலது கண் சூரியகலையையும்,
இடது கண் சந்திர கலையையும், நடுவில் உள்ள
ஞானசபை என்னும் முன்றாவது கண் என்னும் ஆன்மா
அக்னி கலையாகவும், அந்த அக்னி கலையான ஆன்மாவின்
உள்ளே இறைவன் திருநடம் புரிகின்றார்.

அதை புரிந்து கொள்வதற்கு நமக்கு தடையாக இருப்பது
நமது மனமும் அதை பற்றிய ராக துவேசங்களும்தான்
அதுதான் திரையாக நமது ஆன்மாவை தெரியவொட்டாமல
மறைத்து உள்ளது. அந்த திரை விலகுவதற்கு மனதின்
கட்டுப்பாட்டிலிருந்து அறிவின் நிலைக்கு நாம் உயர வேண்டும்.

அந்த நடம் புரியும் இறைவனை நாம் தற்போதமற்ற நிலையில்
காண்பதே ஜோதி தரிசனம்.

இது நமது தூல கண்களால் காணக்கூடியதல்ல.

அடுத்து கடவுள் நலை நாம் உணர்ந்ததனால் அம்மயமாதல்
எனும் சீவ சிவ ஐக்கியம் தானே ஏற்படும்.

இதைதான் நமது வள்ளல் பெருமான் ஞானநிலையினை
நாம் தெரிந்து கொள்வதற்காக புறத்திலே நமக்காக கட்டி வைத்தார்கள்.

Friday, December 24, 2010

உலக சமத்துவம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக உலகத்தில் ஏற்பட்டுள்ள
மிக பெரிய மாற்றங்கள்

உலக ஒற்றுமைக்காக ஐ நா சபை தோற்றம்
மேலை நாடுகளின் மிக பெரிய பிரச்சனையான இன வேறுபாடு
ஒழிக்கப்பட்டு இன வேறுபாடு காண்பது குற்றமாக கருதப்பட்டு
தண்டனைக்குரிய சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது.
மாமிச உணவையே பிரதானமாக உண்ணும் மக்கள் மத்தியில்
ஜீவ காருண்யம் தலை தூக்கி இருப்பது.

ஜீவ காருண்யத்தை ஆயுதமாக எடுத்த காந்தி மகான் தோன்றி
நமது இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தது.

மேலும்
நமது தேசத்தில் வருணாசிரமம் என்கின்ற
ஒரு காட்டு மிராண்டி தனமான எழுதாத சட்டம்
ஒரு பிரிவினர் உயர்ந்த வகுப்பாகவும்,
அவர்களுக்கு உதவும் வகுப்பினர் அவர்களை விட சிறிது தாழ்ந்தவர்களாகவும்
அடுத்து போர்குணம் கொண்ட வகுப்பினர் அவர்களை விட
தாழ்ந்த மக்களாகவும்
பொருளாத ரீதியில் மிகவும் பின் தங்கியவர்களை
மிகவும் தாழ்ந்த மனிதர்களாகவும்
நடத்தப்பட்டு மனிதர்களிடையே பிரிவினையும்
பேதமும் காண்கின்ற நிலை
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது இன்று எங்கே ஓடி போனது.
இவை அனைத்தும் வள்ளல் பெருமானார் வருகைக்கு பிறகு
ஏற்பட்டதுதான்.

முதலில் சன்மார்க்க அடிப்படை என்ன என்றால்
உயிர்களிடம் உள்ள பேதம் நீங்கி அனைவரையும்
சகோதரர்களாக காண்கின்ற பக்குவத்தை பெறுவதுதான்.
உண்மையில் இன்றைய உலகில்
95 சதவீதம் மக்கள் நல்லவர்களாக 5 சதவீதம் தீயவர்களாகவும்
இருக்கின்றார்கள்.

அப்படி இல்லாமல் இருக்குமேயானால்
உலகம் இன்றைக்கு அமைதி பெற்று இருக்காது.
உலகில் தோன்றிய மதங்கள், சமயங்கள் எல்லாம்
காலம் காலமாக தீமையிலிருந்து மனிதர்களை
மீட்பதற்காக பாடுபட்டன. ஆனால் அவற்றில் சமத்துவம்
முழுவதுமாக இல்லாத காரணத்தினால்
மனிதர்களை திருத்துவதற்காக
இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்.
அவர் இன்றும் சூக்கும தேகத்தின் மூலம்
உலகை வழி நடத்தி வருகிறார்.

ஆகவே கூடிய விரைவில் உலகம் முழுமையாக
சமத்துவம் நிறைந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை.

திருநீறு ( விபூதி ) தத்துவம்

திருநீறு ( விபூதி ) தத்துவம்

பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில்
பதி என்பது இறைவனையும்
பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும்
பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும்
( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்)
பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில்
கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால்
பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து
அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை
சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.
இதில் உள்ள தத்துவம்
பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள்
பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய
ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால்
அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல்
நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த
மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி
இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார்.

ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி
இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும்
பட்டினத்தாரும் மட்டுமே.
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால்
ஞானத்தை அடைந்தார்.

பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார்.
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார்
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார்.
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன்
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.

பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும்
என்று என்று கூறினார்.

பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது.
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான்
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது.
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார்
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது.
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார்
பேய் கரும்பு இனித்தது.

இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம்
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன்
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில்
புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதே போல் மறுமுறையும் செய்தார்.
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை.
சிவத்தோடு கலந்து விட்டார்.

இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில்
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம்
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும்.
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய்
தேனின் சுவையாக மாறி விடும்.

அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம்
தேனின் சுவையோடு இருக்கும்.
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால்
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும்.
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட
முக்திக்கான அடையாளம்.

நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள்.
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.

அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால்
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால்
நாமும் இறை நிலையினை அடையலாம்.

Friday, November 26, 2010

தாய் மொழி கல்வி

ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.

இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.

அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது கல்வி முறை உள்ளது.

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.

நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு. அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.

மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால் குழந்தைகளின் நிலை ?

ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.
இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும் விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.

ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள பயத்தினை போக்கி விடுகிறது.

ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?

நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும் மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.

கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.

Wednesday, November 24, 2010

போக்கும் வரவும் அற்றவன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மனிதராக பிறந்த அனைவரும் அடைய வேண்டியது
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே.
கடவுள் மயமாக நாம் மாற வேண்டும் என்றால்
முதலில் நாம் கடவுளின் நிலையினை உணர வேண்டும்.
ஆனால் நாம்
நமது கண்களால் காண்பதை மட்டுமே
நம்பி பழக்கப்பட்டு இருக்கிறோம்.


மேலும்
புலன் வழியாக உணர்வதையே நம்புகிறோம்.
கண்ணால் பார்க்கின்ற உணர்வு,
காதால் கேட்கின்ற உணர்வு
நாவால் சுவைக்கின்ற உணர்வு,
நாசியால் சுவாசிக்கின்ற உணர்வு,
உடலால் ச்பரிசிக்கின்ற உணர்வு
என அனைத்தையும் உணர்வாகவே அறிகிறோம்.


ஆனால் இறை நிலை என்பது
உணர்வு கடந்த நிலையிலேயே இருப்பதாக
இறை நிலையை அடைந்தவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
இதை தற்போதம் கடந்த நிலை என்று
சமய சன்மார்க்கம் தொடங்கி
சுத்த சன்மார்க்கம் வரை அனைத்து அனுபவிகளும்
எடுத்து இயம்புகிறார்கள்.


அதாவது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என்ற ஐந்தில் ஐந்தாவதாக உள்ள துரியாதீத நிலை
தற்போதம் அற்ற நிலை - உண்மை அறிவு நிலை.
அப்போது மனம் அற்று - சுவாசம் அற்று
நான் என்கின்ற நிலையும் அற்று நிர்மல நிலையினை
அடையும்போதுதான் கடவுள் நிலையான
ஜோதி தரிசனம் வாய்க்கும்.


போக்கும் வரவும் உள்ளது
ஒன்று நமது மனம் மற்றொன்று நமது சுவாசம்
இரண்டுமே இறை தரிசனத்தின் போது நீங்கி விடும்.
மேலும் நான் என்கின்ற உணர்வு அற்ற நிலையில்
நமது தூல கண்களால் காணாமல் நமது ஆன்மா தன்னை அறிதலே
ஆன்ம காட்சி அல்லது ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
ஆகவேதான் மாணிக்க வாசக பெருமான்
போக்கும் வரவும் இல்லா புண்ணியனே என்றும்,
காண்பரிய பேரொளியே என்றும் பாடி உள்ளார்கள்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு