Sunday, April 11, 2010

மூலாதாரம் எது என்பதன் ஆதாரம்

மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார்
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார்
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார்
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார்
கானியதோர் கபால நிலா அறமே என்பார்
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.

பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார்
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார்
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார்
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி
கொடிதான துயரத்தால் மாண்டு போவார்
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும்
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே.

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும் சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.

எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும்.
நமது வள்ளல் பெருமானும்
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன
அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி
என்று கூறி உள்ளார்கள்.
ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment