Tuesday, April 6, 2010

மனம் எனும் ஓர் பேய் குரங்கு

நமது வள்ளல் பெருமானார் மனம் என்பது நம்மை
கீழ் நிலைக்கு தள்ள எப்போதும் தயாராக இருப்பதாக
நம்மை எச்சரிக்கிறார்.

அப்படிப்பட்ட மோசமான மனதை ஒரு சிலர் வளர்க்க கற்று கொடுக்கிறார்கள்.
மனமானது வளர்ந்தால் அது உலகியல் நாட்டத்தையே நாடும்.
அடுத்து நம்மை அடிமைப்படுத்தி அதன் பாதையில் செல்ல வைத்து விடும்.

நமது சன்மார்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால்
நாம் மனதை ஒடுக்கி அதன் செயல் எந்த விதத்திலும் வெளிப்படா வண்ணம்
நம்ம காத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட மனதை பற்றி நமது வள்ளல் பெருமான்
கீழ் கண்ட பாடல்களில் தெளிவு படுத்தி உள்ளார்கள்.

மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை ஆனாலோ
திணை அளவு உன் அதிகாரம் செல்ல வோட்டேன் உலகம்
சிரிக்க உன்னை அடக்கிடுவேன் திருவருளார் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்
ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.

பன் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச பயலே
பதையாதே சிதையாதே பார்க்குமிடம் எல்லாம்
கொன் முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது
குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது
என் முன் ஓர் புல் முனை மேல் இருந்த பனி துளி நீ
இம் எனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ
பின் முன் என நினையேல் காண் சிற்ச் சபையில் நடிக்கும்
பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்
புரிந்த நெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்
புரியாதே விரையாதே புகுந்து மயங்காதே
தெரிந்து தெளிந்து ஒரு நிலையிற் சித்திரம் போல் இரு நீ
சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்து எனை நீ யாரென்று பார்த்தாய் சிற்ச் சபை வாழ்
பத்தி தனக்கே அருட் பட்டம் பலித்த பிள்ளை நானே.

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டுப் பயலே
பல் போறியாம் படுக் காளிப் பயல்களோடுங் கூடி
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி
தியங்காதே ஒரு வார்த்தை திரு வார்த்தை எனவே
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியோடு வெரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை
பேய் மதியா நீ எனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன் தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே. - வள்ளலார்.

மேற்கண்ட பாடலில் வள்ளல் பெருமான் மனத்தை ஒடுக்கி
செயலிழக்க செய்ய வேண்டும் என்பதை கூறி இருக்கிறார்கள்.
அதை விடுத்து மனத்தை வளர்த்தால் அது
நம்மை கீழ் நிலைக்கு தள்ளி விடும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment