Monday, May 3, 2010

கேள்வி - பதில் -4 & 5

4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா?

இன்றைக்கும் அவரது கைப்பிரதி தரும சாலையில் உள்ளது.
இந்த தரும சாலை என்பது வடலூர் ஞான சபை அருகில் உள்ளது.
ஆகவே யாரும் இடை செருகல் செய்ய முடியாது.
மேலும் அவர் இதற்கு அடுத்த நிலையினையும் எழுதியதாகவும்.
பக்குவப்பட்டவர்கள் இல்லாத காரணத்தால் அவை வெளிப்பட வில்லை என்றும் தெரிகிறது.


5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு. வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா?

இந்த நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இது அவரது ஆரம்ப காலத்தில் நடந்தது அல்ல.
முதலில் பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்ன என்றால்
நான் பிரம்மம் என்னை தவிர வேறு இல்லை என்பதுதான்.
ஆனால் இந்த நிலையினை அடைவதற்கு வழி என்ன.

வெறும் வாயால் நான் பிரம்மம் என்று சொன்னால் அந்த நிலையினை அடைந்ததாக ஆகி விடுமா ?

இந்த விவாதத்தில் வள்ளல் பெருமானை ஏற்றி விட்டவர்கள் ஒரு சில தீட்சிதர்கள். அவர்களுக்கு ஆதரவாகவே உருவ வழிபாட்டை பற்றி வள்ளல் பெருமான் கூறினார்கள்.
அதாவது நான் பிரம்மம் என்ற நிலை வர வேண்டும் என்றால் நான் என்கின்ற நிலை போய் நிஷ்கலமாக மாற வேண்டும்.

இந்த நிஷ்கல நிலை என்பது வாயால் சொல்வது அல்ல. இது அனுபவம்.
(ஒரு சிலர் ரமண மகரிஷியின் அனுபவத்தை படித்து விட்டு உலகியலில் அனைத்து காரியத்தையும் செய்து கொண்டு அந்த நிலையினை அடைந்து விட்டதை போன்று பேசுவது போல் அல்ல).

நான் பிரம்மம் என்னும் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால்
உருவம் கரைந்து அருவமாக மாற வேண்டும்.
இங்கே நான் என்கின்ற உணர்வு அற்றால் தான் இந்த நிலை வாய்க்கும்.
இங்கே நான் பிரம்ம்மம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில்தான்.
எப்படி என்றால்
நான் பிரம்மம் என்று சொல்லக் கூடிய உணர்வு மீதம் இருப்பதனால்
இங்கே ஜீவ ஐக்கியம் என்பது ஏற்படவில்லை
ஜீவ ஐக்கியம் ஏறபடவில்லை என்றால் அது ஜீவன் வேறாகவும்
இறைவன் வேறாகவும் காண்கின்ற நிலை உள்ளது.
இறைவனை வேறாக காண்கின்ற நிலை இருக்கும் வரை நான் பிரம்மம் என்று சொல்வது வெறும் பேச்சளவாக தான் இருக்கும்.
ஆகவேதான் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால்
முதலில் உருவ வழிபாட்டை உணர்ந்து அது கரைந்து அருவ நிலையினை அடைய வேண்டும் என்று வாதிட்டார்கள்.
இந்த வாதத்திற்கு எதிர் வாதம் செய்ய முடியாத ஸ்ரீதர நாயக்கர்
விவாதத்தை விட்டு வெளியேறினார்.
வள்ளல் பெருமான் பிரம்ம சமாஜ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார் என்பதை விட பிரம்மத்தை எப்படி உணரலாம் என்று கருத்தை தெரிவித்தார் என்பதே உண்மை. அதற்கான படியாக உருவ வழிபாடு இருக்கும் என்றே கூறினார். அதற்காக உருவ வழ்பாட்டின் மூலம் இறை நிலையை அடைய முடியும் என்று கூற வில்லை.

No comments:

Post a Comment