Tuesday, May 18, 2010

சுவர்க்கம் நரகம் - 2

இது வரை நரகம் என்பது துக்கம் நிறைந்தது என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே கூறுகின்றன.
நாம் வாழும் இந்த உலகமும் (சம்சாரம்) துக்கம் நிறைந்ததாகவே உள்ளது.
நாம் உடல் எடுத்தது முதல் உறவுகள் தொடர்கின்றன.
உண்மையில் இவர்கள் அனைவரும் நமது உடலுக்கு மட்டுமே உறவுகளாக தெரிகின்றார்கள். காரணம் நாம் உடல் சார்ந்து பார்க்கும் தன்மை பெற்றதனால்.
ஆன்மா சார்ந்து பார்க்கின்ற தன்மை பெற்றவர்களுக்கும் இவர்கள் உறவுகளாகவே தெரிவார்கள்.
ஆனால் அந்த உறவு ஒன்றிலிருந்து பிரிந்து வந்த அனைவரும் சகோதர உணர்வு மட்டுமே.
மற்ற படி தாய், சகோதரன், சகோதரி, மனைவி, குழந்தைகள், போன்ற உறவுகள் அனைத்தும் உடல் சார்ந்து இருப்பதனால் இதில் உறவு தோன்றியது போல் பிரிவும் உள்ளதனால் துக்கமே மேலோங்கி இருக்கிறது.
எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் இந்த உறவுகளில்
ஏற்படுவதனால் இந்த உறவுகள் துக்க கரமானதாகவே இருக்கிறது.
தேக உணர்வின் காரணமாய் இங்கே மனதின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. மனம் எப்போதும் மாயையின் கைப்பாவையாகதான் இயங்கி வருகிறது.
மனம் மற்றும் புலன் வழி செல்லாமல் அறிவின் வழி செல்பவர்கள்
மிக சுலபமாக அசுத்த மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

ஆன்மா இங்கேயே விழிப்பு நிலையினை அடைந்து விட்டால்
இறை நிலையினை அடைவதற்கு முன்னர்
அதே போன்ற விழிப்பு நிலை பெற்ற ஆன்மாக்களுக்கு
உண்மையை உணர்த்த முடியும்.

அப்படி என்றால் நாம் அனைவரும்
விழிப்பு நிலையில் இல்லையா என்றால் ?
இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
நாம் ஒரு வித துயில் நிலையில் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என படிகளை கடந்தால் மட்டுமே
இறை நிலையினை அறிய முடியும்.

இதைதான் துரியமும் கடந்த சுகம் பூரணம் என்று கூறி இருக்கிறார்கள்.

இங்கே மாயை என்பது நமது ஆன்மா இந்த உடல் படுகின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் தான் படுவதாக நினைத்து இந்த உடல் தான் நான் என்கின்ற உணர்வுடன் இருப்பது. இததான் நான் என்னும் உணர்வு என்று கூறி இருக்கிறார்கள்.

ஆக இந்த உணர்வு கடந்த நிலைக்கு செல்வதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அடைய வேண்டியதாக வகுக்கப் பட்டுள்ளது.

அதைதான் உரு உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீதமாம் அருட் பெரும் ஜோதி
என்று கூறி உள்ளார்கள்.

இதற்கு இடையில் ஆன்மா சூகுமமாகதான் எப்போதும் இருக்கிறது.
ஆகவே அது இன்னொரு சூக்கும உடல் எடுக்க தேவை இல்லை.
ஆக நரகம் என்பது இந்த மனித தேகம் நான் என்னும் உணர்வுடன் வாழ்வதுதான்.
சுவர்க்கம் என்பது இந்த தேகம் நான் அல்ல
நான் ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவன்
அந்த ஒன்றில் ஒன்றுவதை உணர்வதுதான்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான்.

தேகம் நான் அல்ல என்பதை உணராமல் இருந்தாலும் தெரிந்து பாப காரிய்ங்களைச் செய்யாமல் , புண்ணிய காரியங்களையே செய்துவரும் மனிதர்களும் நரக்த்தில்தான் இருக்கிறார்களா,?
அப்படியானால் ஒரு சிலருக்கு மட்டுமே சொர்கம் கிடைக்குமா, அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான் சொர்கம் எனும் நிலை கிடைக்குமா,?

தேகம் நான் அல்ல என்னும் உணர்வு இல்லா நிலை இருப்பினும்
ஒருவர் செய்யும் நற் செயல்கள் அவர் மனதின் கட்டுப்பாட்டிலிருந்து விடு படுகிறார் என்பதற்கான அறிகுறி.
அவர் பாவ செயலகளிலிருந்து விலகி புண்ணிய காரியங்களை செய்வதனால் அவர் அறிவின் வழி நடக்கிறார் என்பது தெளிவு.
எவர் ஒருவர் அறிவின் வழி நடக்கிறாரோ அவருக்கு உண்மை மிக சுலபமாக புலப்படும்.
அல்லது இறைவன் அவருக்கு உண்மையை உணர வைப்பார்.
இது போன்றவர்களுக்கு ஞானம் மிக சுலபமாக கை கூடும்.
இருப்பினும் அவர் தான் செய்வது புண்ணிய காரியம் என்றும் அந்த புண்ணியம் என்னையா அல்லது எனது குடும்பத்தையோ சேர வேண்டும் என்று செய்தால்
அது அவருக்கு விலங்கு ஆகத்தான் அமையும்.
தான் செய்கின்ற அனைத்து நற் காரியங்களும் நிஷ் காமியம் அதாவது
நிர்மலம் என்னும் பற்றற்ற நிலையில் செய்யும் போது மிக சுலபமாக
நரக நிலையிலிருந்து விடு பட முடியும்.

இங்கே புண்ணிய காரியம் என்பது தங்கத்தால் ஆன சிறை
பாவ காரியம் என்பது இரும்பினால் ஆன சிறை.
சிறை என்பது தங்கத்தினால் இருந்தால் என்ன ?
இரும்பினால் இருந்தால் என்ன ?
சிறையில் இருக்க யார்தான் விரும்புவார்கள் ?
ஆக நல் வினை மற்றும் தீ வினை இரண்டும் கடந்தால்
பிறவியிலிருந்து விடுபடலாம்.
அதாவது இறை நிலையை அடையலாம்.

மற்ற படி எந்த ஆன்மாவும் சுவர்க்கம் நரகம் என்று
உலகில் உள்ள எந்த மதத்திலும் சொல்லியபடி அனுபவிப்பது இல்லை.

1 comment:

  1. பதம் பிரித்து:
    ஆதம் இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்
    ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு 'ஆ! ஆ!' என்று
    ஓதமலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
    பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம்பரனே!


    பதம் பிரித்து:
    இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது; இத்தைப்
    பொருள் எனக் களித்து அரு நரகத்திடை விழப் புகுகின்றேனைத்
    தெருளும் மும்மதில் நொடி வரை இடிதரச், சினப் பதத்தொடு செம் தீ
    அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே! - அதிசயப் பத்து

    இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய்
    அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்
    சிந்தை தனைத் தெளிவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட
    அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே.

    'பித்தன்' என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்
    ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,
    செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை
    அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


    கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
    நள்ளேன் நினதடி யாரொடல் லால் நரகம்புகினும்
    எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா
    உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே.

    ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
    சிவ அறிவொளியன்
    தனித்திரு, விழித்திரு, பசித்திரு

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    ReplyDelete