Wednesday, November 24, 2010

போக்கும் வரவும் அற்றவன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மனிதராக பிறந்த அனைவரும் அடைய வேண்டியது
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே.
கடவுள் மயமாக நாம் மாற வேண்டும் என்றால்
முதலில் நாம் கடவுளின் நிலையினை உணர வேண்டும்.
ஆனால் நாம்
நமது கண்களால் காண்பதை மட்டுமே
நம்பி பழக்கப்பட்டு இருக்கிறோம்.


மேலும்
புலன் வழியாக உணர்வதையே நம்புகிறோம்.
கண்ணால் பார்க்கின்ற உணர்வு,
காதால் கேட்கின்ற உணர்வு
நாவால் சுவைக்கின்ற உணர்வு,
நாசியால் சுவாசிக்கின்ற உணர்வு,
உடலால் ச்பரிசிக்கின்ற உணர்வு
என அனைத்தையும் உணர்வாகவே அறிகிறோம்.


ஆனால் இறை நிலை என்பது
உணர்வு கடந்த நிலையிலேயே இருப்பதாக
இறை நிலையை அடைந்தவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
இதை தற்போதம் கடந்த நிலை என்று
சமய சன்மார்க்கம் தொடங்கி
சுத்த சன்மார்க்கம் வரை அனைத்து அனுபவிகளும்
எடுத்து இயம்புகிறார்கள்.


அதாவது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என்ற ஐந்தில் ஐந்தாவதாக உள்ள துரியாதீத நிலை
தற்போதம் அற்ற நிலை - உண்மை அறிவு நிலை.
அப்போது மனம் அற்று - சுவாசம் அற்று
நான் என்கின்ற நிலையும் அற்று நிர்மல நிலையினை
அடையும்போதுதான் கடவுள் நிலையான
ஜோதி தரிசனம் வாய்க்கும்.


போக்கும் வரவும் உள்ளது
ஒன்று நமது மனம் மற்றொன்று நமது சுவாசம்
இரண்டுமே இறை தரிசனத்தின் போது நீங்கி விடும்.
மேலும் நான் என்கின்ற உணர்வு அற்ற நிலையில்
நமது தூல கண்களால் காணாமல் நமது ஆன்மா தன்னை அறிதலே
ஆன்ம காட்சி அல்லது ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
ஆகவேதான் மாணிக்க வாசக பெருமான்
போக்கும் வரவும் இல்லா புண்ணியனே என்றும்,
காண்பரிய பேரொளியே என்றும் பாடி உள்ளார்கள்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment