அன்பு சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,
முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே
நமது வள்ளல் பெருமானின் வரிகளுக்கு
முன்னுறு மல இருள் என்றால்
நமது ஆன்மா ஒன்றான சிவத்திலிருந்து பிரிந்து
ஜீவன் என்ற நிலையை அடைந்து
உடல் எடுத்தது. அந்த உடலுடன் அறிவும் சேர்ந்தது
அறிவு தன்னுடைய நிழலாக மனதை கொண்டது.
நமது ஆன்மா சிவத்திலிருந்து பிரிந்த போது
சுத்த மாயை வயப்பட்டது.
ஜீவன் நிலைக்கு இறங்கிய போது அசுத்த மாயை வயப்பட்டது.
காரணம் ஜீவன் உடல் எடுக்கும் போது மனம் எனும் அசுத்த மாயையும்
கூட வந்ததுதான்.
மனதின் வழி சென்ற ஜீவன் தன் செய்கையால் (கர்மங்களால்)
நல் வினை தீ வினை என்ற வினைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியது. இதன் பயனாய் பிறவி
பிணி நம்மை தொடர தொடங்கியது.
இந்த பிறப்பிற்கு வித்தான அசுத்த மாயையான இரு வினையினை தான்
நமது வள்ளல் பெருமான் முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரை என்பது என்னுடைய உள்ளில் விளங்கும் ஆன்மா வரை
மேல் எழுந்த செஞ்சுடர் என்பது
உள்ளே விளங்கும் ஞான சபையில் செஞ்சுடர் அனுபவத்தை
ஆன்மா அனுபவிப்பதை குறிக்கிறது.
அதே போல்தான்
ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே.
இந்த இரு வரிகளுக்கு
ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய் சுடரே
ஆன்மா ஜோதி தரிசனம் பெற்ற அனுபவமும்
உள்ளொளி ஓங்கிட என்பதற்கு
ஆன்மா மாயையால் மறைப்புண்டு இருப்பதனால்
அதன் ஒளி மங்கி இருக்கிறது.
அசுத்த மாயை விலகினால் ஆன்மாவின் ஒளி ஓங்கி ஒளி விடும்.
அதன் பயனாய் உயிர் எனும் ஜீவனும் ஒளி பெறும்
அப்படிப்பட்ட மாயை வென்றதனால்
சிவத்தின் உண்மை ஒளியான வெள்ளொளி தரிசனம்
பெற்றதனை குறிப்பிடுகிறார்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
No comments:
Post a Comment