அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.
அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.
உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.
அது போல்தான் ஞான மார்க்கத்தில்
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.
ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.
நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
No comments:
Post a Comment