அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
மனதின் தன்மை அது எந்த பொருளை காண்கிறதோ
அந்த பொருளை தன் வசம் ஆக்க முயற்சிக்கும்.
அடுத்து அந்த பொருளை தன் அடிமையாக ஆக்கி விடும்.
அப்படிப்பட்ட மனம் நம்மோடே இருக்கும் போது
நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால்
மனம் போன போக்கினிலே போக வேண்டாம்
என்ற வாக்கிற்கேற்ப
மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி
வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
மனமானது
ஆசை காட்டி அதன் வழி போக வைக்கும்
பயமுறுத்தி அதன் வழி நடக்க வைக்கும்.
பற்றுகளை வைத்து அதன் வழி செலுத்த வைக்கும்
பாசங்களை வைத்து அதன் வழி கேட்க வைக்கும்
அப்படிப்பட்ட மனதை
நாம் பேராசை படுவதிலிருந்து விடுபட்டால்
அச்சபடுவதிலிருந்து விலகி இருந்தால்
எத்தன மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால்
எவர் மீதும் பாசம் வைக்காமல்
அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால்
மனமானது நம் அறிவின் வழி நடந்து
நமது அடிமையாக பணி புரியும்.
நாம் ஆசைப் படுவதிலிருந்தும், அச்சப்படுவதில் இருந்தும்,
பற்று வைப்பதிலிருந்தும், பாசம் வைப்பதிலிருந்தும்
விடுபடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது
அது
நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக
வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன்
வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நாம் ஊட்டிக்கோ, காஷ்மிருக்கோ அல்லது ஆஸ்திரேலியா விற்கோ
சுற்றுலா செல்வதாக வைத்துகொண்டால்
நமக்கு எவ்வளவு குறைவான பொருட்கள் தேவையோ
அந்த அளவுக்குத்தான் பொருட்களை எடுத்து செல்வோம்.
அதே போல் நாம் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்த
பொருட்கள் தேவையோ அந்த அளவு பொருட்களை மட்டும்
நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சுற்றுலா சென்ற இடத்தில் நமக்கு தேவை இல்லாத பொருட்களை
நாம் என்ன செய்வோம் அங்கே வேறு யாருக்காவது கொடுத்து விடுவோம். காரணம் அது
நமக்கு சுமையாக ஆகி விடும் என்பதனால்தான்.
அடுத்து நம்மோடு சுற்றுலா வந்தவர்கள் மீது அன்பு செலுத்துவோம் ஆனால் அவர்கள்
மீது பாசம் வைக்க மாட்டோம்.
ஏனென்றால் அவர்கள் நம்மோடு வர மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அதே போல்
தான் நம்மோடு பிறந்தவர்கள், நமக்கு பிறந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள், நக்கு
துணையாக இருப்பவர்கள்
அனைவருமே நம்மோடு சுற்றுலா வந்தவர்கள்.
அவர்களிடம் அன்பு வைக்கலாம் ஆனால் பாசம் வைக்க கூடாது.
நாம் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தால்
அந்த பனியின் குளிரை தாங்கும் அளவிற்கு கம்பளி உடை
அணிந்து செல்வோம். காரணம் அந்த பிரதேசத்தில்
இருப்பதற்கு அந்த உடை இருந்தால் தான் குளிர் நம்மை தாக்காது.
அது போல் இந்த பூமியை சுற்றி பார்ப்பதற்கு
நாம் மனிதன் என்ற உடை உடுத்தி வந்து இருக்கிறோம்.
ஆக நமது உடை இந்த பூமிக்கான உடை.
மீண்டும் நாம் வந்த இடமான சிவ பிரதேசத்திற்கு
செல்லும் போது இந்த அசுத்த உடையை விட்டு விட்டு
அல்லது இந்த உடையை சுத்தப்படுத்திக் கொண்டு
நமது சொந்த இடத்திற்கு திரும்ப போகிறோம்.
அப்படி இருக்கும்போது
நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை
நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை
நமது உறவினர்கள் நண்பர்கள் நமக்கு சொந்தம் இல்லை
நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை.
நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாததனால்
நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல்
எதற்கும், எவருக்கும் பயப்படாமல்
மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
No comments:
Post a Comment